இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்.
ஜனாதிபதி, புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானமான UL196 இல் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஜனாதிபதி தமது இந்திய விஜயத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் இந்திய செல்வந்தரான கௌதம் அதானி ஆகியோருடன் பேச்சுகளை நடத்தி இருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பில், பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இதன்பின்னர், இருவரும் கூட்டு ஊடக சந்திப்பை நடத்தினர்.
இதன்போது கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசு, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அதேநேரம், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின் நலன் கருதி, 75 கோடி இந்திய ரூபா மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்கள் அமுலாக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இதேவேளை, இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சில், பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடல் மற்றும் வான்வழி இணைப்பு, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி இணைப்புகள், வர்த்தகம், பொருளாதார மற்றும் நிதி ரீதியான தொடர்புகள் என்பன தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.