அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையும் போராடி வருகின்றது என்று கூறியுள்ள அக்கட்சியின் முன்னாள் எம்.பி. முஜிபுர் ரஹ்மான் அது தொடர்பில் இதுவரை 40 இற்கு மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானது முதல் இன்றுவரை மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
அவர் பதவியை விட்டோடி அடுத்தவர் அவரது இடத்துக்கு வந்த போதிலும் பெரிய மாற்றம் ஒன்றும் இடம்பெற்றுவிடவில்லை.
புதிய வறுமையால் 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உருவாகியுள்ளது. இது மிகவும் பாரதூரமான நிலைமை. மூன்று வேளை சாப்பிட்டவர்கள் அதை இரண்டு வேளையாக மாற்றியுள்ளனர். இரண்டு வேளை உண்டவர்கள் ஒரு வேளையாக மாற்றியுள்ளனர்.
இந்த நிலைமை மோசமடையுமே தவிர பிரச்சினை தீர்வதற்கு வழியில்லை. அரசு உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட்டுவிட்டு தேவையற்ற வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றது.
அரசின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் போராடி வருகின்றோம். இதுவரை 40 இற்கு மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கின்றோம். நாம் தொடர்ந்தும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் போராடுவோம்.” – என்றார்.