சஜித்துக்கு ரணில் மீண்டும் அழைப்பு! (Photos)

Share

போலியான தர்க்கங்களை முன்வைத்து தோல்வியைத் தழுவிக் கொள்வதற்கு மாறாக நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசுடன் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சியினர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“நாட்டில் நிதி உறுதிப்பாட்டை உருவாக்குவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இந்நாட்டின் வங்கிகள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றின் மீது கைவைக்காமல் மேற்படி நகர்வை முன்னெடுக்குமாறு எனது ஆலோசகருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் அறிவுறுத்தினேன். இதன் ஒரு கட்டமாகவே உள்ளூர்க் கடன் சீராக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஈ.பி.எப். இல் கைவைக்கவில்லை

முதலாவதாக ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது கைவைக்க வேண்டாம் என்கிறார்கள். நாம் அதன் மீது கைவைக்கவில்லை. மேலும் நான் ஜனாதிபதியாவதற்கு முன்பாகவே அதற்கான வட்டி வீதம் 10% -9% ஆகக் குறைவடைந்திருந்தது. அதேபோல் குறைந்தபட்சம் 9% சதவீத வட்டி வழங்கப்பட வேண்டும் என்பதை அமைச்சரவையே தீர்மானித்திருந்தது. நல்லதொரு மேம்பாடு வருகின்ற போது 10% சதவீத வட்டியை நாம் அறிவிப்போம். ஊழியர் சேமலாபத்தில் நாம் கைவைக்கவில்லை என்பதோடு 9% வட்டி என்பது சட்டத்தின் ஊடாகவே உறுதிப்பட்டுள்ளது.

அடுத்தாக கடன்களுக்கு 24% சதவீத வட்டி அறவிடப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. ஆனால் அந்த வட்டி எதிர்வரும் நாள்களில் குறைவடையும். பணவீக்கம் 9% இற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதும் வட்டி வீதம் 12% – 13% ஆகவே காணப்பட்டது.

இந்த நேரத்தில் வரி விதிக்க வேண்டிய விதம் பற்றி எதிர்க்கட்சி கூறுமெனில் அதுபற்றி அமைச்சரவையில் ஆலோசிக்க நாம் தயாராகவே உள்ளோம்.

மூன்றாவதாக வங்கிகளுக்கு வரி அதிகரிக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர். இருப்பினும் எம்மால் வங்கிகளிடத்தில் அதிகளவில் வரியை அறவிட முடியும். ஆனால், அப்போதைய வட்டி வீதம் 12% காணப்பட்டாலும் 13%- 14% வரையான வட்டியை அறவிட வேண்டிய நிலைமைக்கு வங்கிகள் தள்ளப்படும். அவ்வாறு வட்டியை அதிகரிக்க இடமளிக்க முடியாது என்பதால் மேற்படி மூன்று யோசனைகளையும் நான் நிராகரித்துவிட்டேன்.

சஜித்துக்கு அழைப்பு

தொடர்ச்சியாக போலியான பரப்புரைகளை முன்னெடுப்பதற்கு மாறாக அரசால் நாட்டின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுடன் இணைந்துக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான முழு எதிர்க்கட்சிக்கும் அழைப்பு விடுக்கிறேன். அவ்வாறு ஒன்றுபடும் பட்சத்தில் நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டத்துக்கு பங்களிப்புச் செய்த பெருமிதத்துடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிட்டும்.

ஆளும் தரப்பில் இருந்தாலும் எதிர்த் தரப்பில் இருந்தாலும் நாட்டின் அபிவிருத்திக்காகவும் நாட்டு மக்களுக்குச் சலுகைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் ஒன்றுபட்டுச் செயற்படுவோம். அதனை விடுத்து போலியான தர்க்கங்களை முன்வைப்பதால் பயனில்லை. அந்த முயற்சியில் எதிர்க்கட்சி பல தடவைகள் தோற்றுப்போயுள்ளது.

சபாநாயகருடன் கலந்துரையாடி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மேலும் பல பொறுப்புக்களை கையளிக்க நான் தயாராகவே உள்ளேன். தற்போதும் அவர்கள் செயற்குழுக்களில் அங்கத்துவம் வகிக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் வரவு – செலவுத்திட்ட அலுவலகம் திறக்கப்படவுள்ளதால் மேலும் பல பொறுப்புக்கள் உருவாகும். அதனால் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வாருங்கள். எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு பாதிப்பு ஏற்பட நாம் இடமளியோம்.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு