இலங்கையில் இரத்த ஆறு ஓடும்! – கஜேந்திரகுமார் பகிரங்க எச்சரிக்கை

Share

“தமிழ், சிங்கள மக்கள் தாங்கள் நம்புகின்ற ஒரு விடயத்துக்காக உயிரைத் தியாகம் செய்வதற்கு தயாராகவே உள்ளனர். அவ்வாறான நிலையில் தங்களை ஏமாற்றும் ‘உண்மை’ தெரியவருகின்ற போது இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும்.”

– இவ்வாறு எச்சரித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு எச்சரித்த அவர், தொடர்ந்து பேசுகையில்,

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த இரு வருடங்களுக்கு மேலாக பொருளாதார சிக்கல் ஏற்பட்ட காலத்திலிருந்து ஒரு புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றது. இதற்கு ஒரு காரணம் உண்டு.

இந்த நாட்டினுடைய மக்கள் அது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களாக இருக்கலாம், தெற்கு சிங்கள மக்களாக இருக்கலாம் தாங்கள் நம்புகின்ற ஒரு விடயத்துக்கு உயிரையும் கொடுக்கத் தயாராகவே உள்ளனர். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது உயிர்களைத் தங்களது விடுதலைக்காக, தேச உரிமைக்காகத் தியாகம் செய்தார்கள்.

தெற்கில் இருக்கக்கூடிய இளைஞர்கள் தங்களுக்கு அசாதாரணம் நடைபெற்றதாகக் கருதியபோது தங்களது உயிர்களைத் தியாகம் செய்தார்கள். இராணுவத்தை எடுத்துப் பார்த்தாலும் கூட அவர்களும் தாங்கள் நம்பிய ஒரு நிலைப்பாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தார்கள். ஆகவே, நாட்டினுடைய சாதாரண மக்கள் உச்ச தியாகத்தைச் செய்வதற்கு தயாராகவே இருக்கின்றார்கள்.

இந்தப் பொருளாதார சிக்கல் ஏற்பட்டதற்கு பின்னர் இந்த நிலைமையிலிருந்து இந்த நாட்டை மீட்டெடுப்பதற்காக நிச்சயமாக அதே மக்கள் போதியளவான தியாகங்களைச் செய்வதற்கு தயாராக இருப்பார்கள். அதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், அதில் ஒரு நிபந்தனை உள்ளது. ஆட்சியாளர்கள் நம்பத் தகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. ஆட்சியாளர்கள் தங்களுக்கு நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்ற நமபிக்கை மக்களுக்கு இருக்க வேண்டும். அந்த அடிப்படை இல்லாமல் தியாகங்களை செய்ய எவரும் தயாராக இருக்க மாட்டார்கள்.

அதனால்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த இரண்டு வருடங்களாக ‘இந்தச் சபையில் இருக்கின்ற நபர்களின் பெரும்பான்மை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். ஆகவே, ஒரு நாடாளுமன்றத் தேர்தல் அத்தியாவசியம்’ என்ற நிலைப்பாட்டைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. அதுமட்டுமல்ல இந்த நாட்டை வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளியவர்களும் கடந்த ஆட்சியில் மத்திய வங்கி பிணைமுறி மோசடியைச் செய்தவர்களும்தான் இன்று ஆட்சியாளர்கள் என்ற பெயரில் ஒன்றுகூடியுள்ளனர். கொள்ளையடித்தவர்கள் அந்தக் கொள்ளையை மீள இந்த நாட்டுக்குக் கொடுத்து நாட்டைக் கட்டியெழுப்ப உதவுவார்கள் என்று நீங்கள் நம்புகின்றீர்களா? அது ஒருபோதும் இல்லை.

ஆனால், இதே நபர்கள்தான் இந்த நாட்டை , நாட்டினுடைய முதுகெலும்பாக இருக்கின்ற அன்றாடத் தொழிலாளர்களுடைய பொருளாதாரத்தைப் பாதுகாக்கப்போகின்றோம் எனக் கூறி இன்று இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கின்றார்கள். இந்த யதார்த்தத்தை நாங்கள் விளங்கிக்கொண்டுதான் தொடர்ச்சியாக ஒரு நாடாளுமன்றத் தேர்தல் அவசியம் எனக் கூறி வருகின்றோம்.

தொழிலாளர்களின் ஈ.பி.எப்.பைத் தொட மாட்டோம் என எங்களுக்கு ஆரம்பத்தில் கூறினார்கள். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நடைபெறாது என்று கூறினார்கள். இன்று அது எல்லாம் தூக்கி எறியப்பட்டுள்ளது.

ஆகவே, எங்களைப் பொறுத்தவரையில் இந்த நாட்டில் ஒரு இரத்த ஆறு ஓடும். நாட்டு மக்கள் கண் திறக்கப்போகின்றார்கள். தங்களைத் தொடர்ச்சியாக அடிமைகளாக வைத்திருப்பதற்கு மிகப்பெரிய பெரும்பான்மை பாதிக்கப்படுகின்றது என்பதும், அவர்களின் பாதிப்பிலிருந்து ஒரு சிறுபான்மை தங்களைப் பாதுகாக்கின்ற ஒரு நிலைமையை உருவாக்குகின்றதும்தான் இங்கே நடைபெறுகின்றது என்ற உண்மையை அறிகின்றபோது மக்கள் கண் திறப்பார்கள். அப்படிக்கண் திறக்கின்றபோது இந்த நாட்டில் ஒரு இரத்த ஆறு ஓடும்.” – என்றார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு