இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி இடம்பெற்ற விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 900 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 இற்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று அஞ்சப்படுகின்றது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்றிரவு 7 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள், அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளன.
இதன்போது பெங்களுரில் இருந்து கொல்கத்தா நோக்கிப் பயணித்த மற்றுமொரு ரயில், தடம்புரண்ட ரயில் பெட்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
அதேநேரம், சரக்கு ரயில் ஒன்றும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
இதையடுத்து, விபத்து நடந்த பகுதியில் இந்திய தேசிய பேரிடர் மீட்பு பணியினர் மற்றும் தீயணைப்புப் படையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான பகுதிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் நபர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காயமடைந்தவர்கள், நோயாளர் காவு வாகனங்கள் மற்றும் பஸ்கள் மூலம் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்துச் செய்யப்படுகின்றன என்றும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இதனிடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விபத்து தொடர்பில் தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நிவாரணங்களை வழங்குமாறு ரயில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்று தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.