பிரான்ஸில் கார் மோதிப் பலியான பொலிஸார் மூவருக்கும் மக்ரோன் நேரில் அஞ்சலி (Photos)

Share

பிரான்ஸில் கார் மோதிப் பலியான பொலிஸார் மூவருக்கும் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சில தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் Villeneuve d’Ascq என்ற இடத்தில் பொலிஸ் வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியதில் இளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்தனர். பெண் உட்பட அந்த மூன்று வீரர்களும் பொலிஸ் அக்கடமியில் பட்டம் பெற்றுக் கொண்டு மிக அண்மையில்தான் பணியில் இணைந்திருந்தனர்.

பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார் எனக் கூறப்படும் இளம் யுவதி ஒருவரை ஏற்றிக்கொண்டு அவசரமாக மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த வேளை அவர்களது பொலிஸ் வாகனத்தை, வீதியில் தவறான திசையில் – எதிர்ப்பக்கத்திலிருந்து வேகமாகச் செலுத்தி வரப்பட்ட கார் ஒன்று மோதியது.

அதன்போது பொலிஸ் வாகனம் தூக்கி வீசப்பட்டது. அதிலிருந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களோடு பயணித்த யுவதி படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.

சுக்குநூறாகச் சிதறிய காரினுள் இருந்து அதைச் செலுத்தி வந்த 24 வயது இளைஞரின் உடல் மீட்டெடுக்கப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது இரத்தத்தில் 2.08 கிராம் அளவுக்கு மதுவும் கஞ்சா போதைப்பொருளும் கலந்திருந்தமை தெரியவந்தது. அவரோடு பயணம் செய்த மற்றொரு இளைஞர் கோமா நிலையில் உள்ளார்.

இது ஒரு வீதி விபத்தா அல்லது திட்டமிட்டுப் பொலிஸ் வாகனத்தின் மீது மோதி நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது.

உயிரிழந்த பொலிஸார் மூவரும் Roubaix நகரத்துப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் வைபவம் அங்குள்ள தேசிய பொலிஸ் பாடசாலையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அங்கு சென்று மூவருக்கும் நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றினார். கடமையின் போது உயிரிழந்த மூவரையும் “குடியரசின் குழந்தைகள்” என வர்ணித்த அவர், அவர்களுக்குத் துணிச்சலுக்கான செவாலியார் (chevalier de la Légion d’honneur) விருதுகளை – மரணத்துக்குப் பிந்திய நிலையில் வழங்கிக் கௌரவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு