பிரிட்டன் பிரதமரது உத்தியோகபூர்வ வசிப்பிடமாகிய நம்பர் 10, டவுணிங் வீதி இல்லத்தின் வாயிற் பகுதியில் கார் ஒன்று மோதியது. அதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தக் காரின் சாரதியைப் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.
சம்பவம் நடந்த வேளை பிரதமர் ரிஷி சுனாக் அங்கு தங்கியிருந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் வதிவிடம் அமைந்துள்ள பகுதி ஊடாகச் செல்லும் வைற்ஹோல் (Whitehall) வீதியில் வந்த’சில்வர் கியா’ (Silver Kia ) ரகக் கார் ஒன்றே அலுவலக வாயில் இரும்பு வேலி மீது மோதியுள்ளது. கார் மோதிய சத்தத்தை அடுத்து அப்பகுதியில் காணப்பட்டோர் பீதியால் வெளியேறத் தொடங்கினர். பெரும் எண்ணிக்கையான பொலிஸ் வாகனங்கள் அங்கு விரைந்து வந்தன.
பொலிஸ் மோப்ப நாய் அணி மற்றும் வெடி குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரும் அங்கு காணப்பட்டனர்.
வைற்ஹோல் வீதியின் பெரும் பகுதி பொலிஸாரால் மூடப்பட்டு சோதனைகள் இடம்பெற்றன.
ஆயுதம் தரித்த பொலிஸார் பிரதமர் அலுவலகப் பகுதியை முழு நேரமும் கண்காணித்து வருகின்ற போதிலும் அந்தப் பகுதி ஊடாகச் செல்கின்ற வைற்ஹோல் வீதியில் பொதுப் போக்குவரத்துகள் அனுமதிக்கப்படுவது வழக்கம் ஆகும்.
இன்று மாலை அலுவலகப் பணிகள் முடிந்து பலரும் வீடு திரும்புகின்ற நேரத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட சாரதி விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.
இந்தச் சம்பவம் ஒரு பயங்கரவாதச் செயலாக இதுவரை கருதப்படவில்லை என்றும், சேதம் ஏற்படுத்தும் விதத்தில் மிக ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இலண்டன் பெருநகரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.