அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட 500 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு வழங்கி வருகின்றன. மேலும் ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இந்தநிலையில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, “அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நிர்வாகத்தால் தொடர்ந்து விதிக்கப்பட்ட ரஷ்யாவுக்கு எதிரான தடைகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் 500 அமெரிக்கர்களுக்கு ரஷ்யாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான ஒரு விரோதமான நடவடிக்கைக்குக் கூட பதிலளிக்கப்படாமல் விடாது என்பதை அமெரிக்கா நீண்ட காலத்துக்கு முன்பே கற்றுக்கொண்டிருக்க வேண்டும்” – என்று தெரிவித்துள்ளது.