இலங்கையில் தொடர்ந்து கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தாது என்று அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகளை நாங்கள் சிந்திக்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் உயிர்களை இழந்தார்கள். மேலும் பலர் காணாமல்போனார்கள், காயமடைந்தார்கள் அல்லது இடம்பெயர்ந்தார்கள்.
நமது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள், இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழ்கின்றார்கள்.
இதன்காரணமாகவே கடந்த ஆண்டு கனேடிய நாடாளுமன்றம் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாகப் பிரகடனப்படுத்தும் பிரேரணையை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
மதம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவ சுதந்திரத்துக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை இலங்கை ஏற்றுக்கொள்வது என்பது எதிர்வரும் ஆண்டுகளில், அந்த நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான அத்தியாவசிய கூறுகளாகும்.
இந்தநிலையில் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பணியைத் தொடருவோம்.
மனித உரிமை மீறல்களுக்குப் பதிலளிக்கும் வகையில், நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு எதிராக தமது அரசு தடைகளை விதித்தது.
இதேவேளை, கனடா அரசின் சார்பாக, தமிழ் கனேடியர்கள், நாட்டுக்கு ஆற்றிய பல பங்களிப்புக்களை அங்கீகரிக்க அனைத்து கனேடியர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
இலங்கையின் ஆயுத மோதலின் தாக்கம் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன் இலங்கையில் பாதிக்கப்பட்ட அல்லது அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள் என்றும் கனேடிய மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.” – என்றுள்ளது.
https://www.youtube.com/watch?v=yRfEdnvaq-0