பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது என்றும், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் ஊழல் தடுப்பு அமைப்புக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராக வந்த இம்ரான் கானை ரேஞ்சர் படையினர் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதையடுத்து, இரவு முழுவதும் இரகசிய இடத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் என்.ஏ.பி. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர், பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் இம்ரான் கான் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
ஊழல் வழக்கு தொடர்பாக அவரிடம் மேலும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைக்க என்.ஏ.பி. அனுமதி கோரியது.
அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், இம்ரான் கானை 8 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்தது.
எனினும், இம்ரான் கான் கைதை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்த நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இம்ரான் கான் கைது சட்டவிரோதம் என்றும், ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி ஆஜர்படுத்தப்பட்ட இம்ரான் கானை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நாளை உச்ச நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.