ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று துணை இராணுவப் படையினரால் சுற்றுவளைக்கப்பட்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதால், அவரது ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில், கான் ஆதரவாளர்களுடனான மோதலில் 157 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆத்திரமடைந்த எதிர்ப்பாளர்கள் இன்று வடமேற்கில் உள்ள ரேடியோ பாகிஸ்தானின் கட்டடத்திற்கு தீ வைத்ததுடன், லாகூரில் உள்ள இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் வீட்டையும் எரித்துள்ளனர்.
மேலும் பல வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு அதிகாரத்தை இழந்த இம்ரான் கான், நாட்டின் மிகவும் பிரபலமான எதிர்க்கட்சி நபராக இருக்கின்றார். பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஏழாவது முன்னாள் பிரதமர் இவராவார்.
அவரது அதிரடியான கைது அரசியல் கொந்தளிப்பை மிகவும் ஆழமாக்கியுள்ளது.
இந்தநிலையில், வன்முறைச் சம்பங்கள் தொடர்பில் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் கானின் கட்சியின் சிரேஷ்ட தலைவரான அசாத் உமர் உட்பட 945 ஆதரவாளர்களை நேற்று முதல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர் மற்றும் பிற இடங்களில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இம்ரான் கான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்லாமாபாத்தில் உள்ள பொலிஸ் வளாகத்துக்குச் செல்லும் வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னிலையில், இம்ரான் கான் பிரசன்னப்படுத்தப்பட்டார் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.