பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், துணை இராணுவப் படையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.
ஊழல் வழக்கு தொடர்பில், இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வைத்து இம்ரான கான் கைது செய்யப்பட்டார்.
“இம்ரான் கானின் கார் சுற்றிவளைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்” என்று இம்ரான் கானின் உதவியாளர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்தார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியால் பகிரப்பட்ட கைது காட்சிகள், பாதுகாப்புப பிரிவினரால் இம்ரான் கான் வானில் ஏற்றப்படுவதைக் காட்டுகின்றன.
கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பையடுத்து இம்ரான் கான் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் மீது பதிவு செய்யப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட வழக்குகளில் இந்த ஊழல் வழக்கும் ஒன்றாகும்.
இம்ரான் கானை அவரது லாகூர் வீட்டில் இருந்து கைது செய்வதற்கான முந்தைய முயற்சிகள் அவரது ஆதரவாளர்களுக்கும் சட்ட அமுலாக்கப் பிரிவினருக்கு இடையே கடும் மோதல்களை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.