பாடசாலை அதிபர் மாணவன் ஒருவரின் தொலைபேசியைப் பறித்தமையால் குறித்த மாணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியா – பூவரசங்குளத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டுப் போட்டிக்கான இல்ல அலங்காரச் செயற்பாட்டை குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டார் எனவும், அதற்கான ஓவியம் வரைவதற்காக அன்றைய தினம் இரவு பாடசாலைக்குத் தொலைபேசியைக் கொண்டு சென்றார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு தொலைபேசியைப் பாடசாலையினுள் குறித்த மாணவன் பாவிப்பதைக் கண்ட அதிபர் தொலைபேசியைப் பறித்ததுடன் மாணவனின் தந்தையைத் தன்னை வந்து சந்திக்க வேண்டும் எனக் கூறினார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அதன்பின்னர் மாணவனின் தாய் அதிபரிடம் தொலைபேசியில் விடயத்தைக் கேட்டதுடன் தொலைபேசியை வழங்குமாறும் கோரியுள்ளார். எனினும், அதிபர் தொலைபேசியை வழங்காததுடன், தந்தையைக் கட்டாயம் தன்னை வந்து சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து தொலைபேசியின் ஊடாக மாணவனின் தந்தை அதிபரைத் தொடர்பு கொண்டு கதைத்துள்ளார்.
இதன்பின்னர், மாணவனின் தந்தை தனக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்று பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் அதிபர் முறைப்பாட்டைப் பதிந்துள்ளார்.
இந்த முறைப்பாட்டையடுத்து இரு தரப்பினரையும் பொலிஸார் அழைத்துப் பேசி விசாரணை நடத்தினர் எனவும் மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையிலேயே அவமானத்தைத் தாங்க முடியாமல் குறித்த மாணவன் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றார் எனவும் மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்காக அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியேர் மனித உரிமை ஆணைக்குழுவால் அழைக்கப்படவுள்ளனர்.
அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளரும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.