இரண்டு கஜமுத்துக்களைக் கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய அம்பாறை மாவட்டம், பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல் ஹலாம் வீதி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே விசேட அதிரடிப் படையினர் குறித்த சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சோதனை நடவடிக்கையின் போது கல்முனை விசேட அதிரடிப் படையினருக்கு உதவியாக அறுகம்பை முகாம் விசேட அதிரடிப் படையினரும் களமிறங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நடவடிக்கையின் போது 2 கஜமுத்துக்களைக் கடத்தி வந்த 37, 60 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களை மாறு வேடத்தில் சென்ற விசேட அதிரடிப் படை அணி கைது செய்தது.
கஜமுத்துக்களையும் சந்தேகநபர்களையும் பொத்துவில் பொலிஸாரிடம் விசேட அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.