“ஜனநாயகம் அல்லாத வழியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளெல்லாம் தோல்வியிலேயே முடியும். ஆட்சியை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்தபோது பின்வாங்கிவிட்டு, தற்போது விமர்சனங்களை முன்வைப்பது பயனற்றது.”
– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஆரம்பிக்கும் போது, வெற்றி பெற முடியாது, ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், மக்கள் வரலாற்று வெற்றியை வழங்கி வைத்தனர். எனினும், மக்கள் எதிர்பார்த்தவற்றை உரிய வகையில் செய்ய முடியாமல் போனது. எடுக்கப்பட்ட சில தவறான முடிவுகள் இதற்குக் காரணமாகும்.
எங்கு தவறிழைக்கப்பட்டது என்பது எமக்குத் தற்போது தெரிகின்றது. இது தொடர்பான அனுபவம்கூட எமக்கு ஒரு பலமாகும்.
‘கோல்பேஸ்’ போராட்டத்தின் பின்னணியில் இருந்தது யார்? அவர்கள் இப்போது என்ன செய்கின்றனர்? என்பது முழு நாடும் அறியும்.
நாட்டைப் பொறுப்பேற்கச் சொன்ன போது பின்வாங்கினர். அவ்வாறு செய்துவிட்டு, பொறுப்பேற்றவர்களை விமர்சிப்பதை செய்து வருகின்றனர். ஜனநாயக வழியில் அல்லாமல் ஆட்சியை முன்னெடுக்க முற்பட்டால் எதுவும் கிடைக்காது.
தற்போதைய எதிர்க்கட்சிக்கு வேலைத்திட்டம் இல்லை. அதனால்தான் அரசின் நல்ல திட்டங்களையும் எதிர்க்கின்றனர்.
மேற்குலக சக்திகளின் கைப்பொம்மையாக மாறாது, தேசிய சிந்தனையின் அடிப்படையில் செயற்பட்டதால்தான் எமக்கு எதிராக அரச சார்பற்ற மற்றும் சில அரசில் கட்சிகளுடன் இணைந்து சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
எமது சொத்துகளுக்கு மட்டுமல்ல உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதே அவர்களின் தேவைப்பாடாக இருந்தது. அதிகாரத்தை பெறுவதற்கு முன்னர் ‘ஹிட்லர்’ வருகின்றார் எனக் கூறினர். இறுதியில் என்ன நடந்தது? அவர் ஹிட்லர் போல் செயற்படவில்லை.
அதிகாரத்தைப் பெறுவது போல் அதைக் கைவிடுவதற்குரிய அனுபவமும் எமது கட்சிக்கு உள்ளது.” – என்றார்.