“பிரபாகரனின் கதையை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கே அமெரிக்கா பயணத் தடை விதித்து வருகின்றது. கோட்டாபய ராஜபக்சவைக்கூட அமெரிக்காவே வீட்டுக்கு அனுப்பிவைத்தது” – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என எதிர்க்கட்சிகளே வலியுறுத்தின. ஆனால், அந்தத் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியினர் சபையில் இருக்கவில்லை. இதன்மூலம் அவர்களின் நோக்கம் தெளிவாகின்றது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாட்டுக்கு அவசியம். தற்போது புதிய சில பயங்கரவாதிகள் உருவாகியுள்ளனர். அரசிடம் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, விடைத்தாள் திருத்தாமல் உள்ளனர். மாணவர்களுக்குக் கல்வி கற்க விடாமல் அவர்களை வீதிக்கு அழைத்து வருகின்றனர். இப்படியான பயங்கரவாதிகளும் உள்ளனர். இவர்கள்தான் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எதிர்க்கின்றனர்.
அதேவேளை, பிரபாகரனின் கதையை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கிய படையினருக்கு அமெரிக்கா தடை விதிப்பது வழமை. தமது நண்பர் இறந்துவிட்டதால் அவர்களுக்கு (அமெரிக்கா) கவலை இருக்கும். இதனால்தான் கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கே விரட்டினர்.” – என்றார்.