137ஆவது தொழிலாளர் தினத்தை இம்முறை பெருமையுடன் கொண்டாடுவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. அந்தவகையில் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் கொழும்பில் இன்று நடைபெறுவதுடன் மற்றுமொரு முக்கிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் மே தினக் கூட்டத்தை கண்டியில் நடத்தவுள்ளது.
அத்துடன், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் உத்தர லங்கா பெரமுன, முற்போக்கு ஜனநாயக கட்சி ஆகியவையும் கொழும்பில் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளதுடன் சுதந்திர மக்கள் சபை அதன் மே தினக் கூட்டத்தை கண்டியில் நடத்தவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியானது ‘2048 வெற்றிபெறுவோம்’ என்ற தொனிப்பொருளில் அதன் மே தினக் கூட்டத்தை கட்சியுடன் இணைந்துள்ள அனைத்து அமைப்புக்கள் மற்றும் சங்கங்களுடன் இணைந்து கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று காலை 9.00 மணிக்கு நடத்தவுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சி முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ‘சவால்களை வீழ்த்தி அபிலாஷைகளை வெற்றிகொள்வோம்’ என்ற தொனிப்பொருளில் கட்சியிலுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து பொரளை கெம்பல் மைதானத்தில் தமது மே தினக் கூட்டத்தை பி.ப. 2.00 மணிக்கு நடத்தவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி அதன் பங்காளிக் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் பி.ப. 3.00 மணிக்கு புறக்கோட்டை ஏ.ஈ. குணசிங்க விளையாட்டரங்கில் தமது மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளதுடன் அதன் ஊர்வலம் மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கிற்கு அருகிலிருந்து பி.ப. 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி மே தினக் கூட்டம் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் அந்தக் கட்சியுடன் இணைந்த அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து பி.ப. 4.00 மணிக்கு நடத்தவுள்ளது.
அதன் மே தின ஊர்வலம் பி.ப. 2.00 மணிக்கு ஹவ்லொக் டவுண் பி.ஆர்.சி. விளையாட்டரங்கிற்கு அருகிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது அக்கட்சியின் தொழிற்சங்கங்களுடன் இணைந்து தமது மே தினக்கூட்டத்தை கண்டி பொது வர்த்தக சந்தை முன்றலில் பி.ப. 1.00 மணிக்கு நடத்தவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் இன்று பி.ப 2.00 மணிக்கு யாழ்ப்பாண நகரில் ஆரம்பமாகவுள்ளதுடன் மட்டக்களப்பு களுவன்கேணியிலும் மே தினக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் பதுளை நகரில் பி.ப. 1.00 மணிக்கு தனது மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளதுடன் அதன் ஊர்வலம் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னிலை சோசலிஷக் கட்சி அதன் தொழிற்சங்கங்களுடன் இணைந்து நுகேகொடை ஆனந்தசமரக்கோன் வெளியரங்கில் பி.ப 3.00 மணிக்கு அதன் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளது. அதற்கான ஊர்வலம் பி.ப. 1.00 மணிக்கு தெல்கந்த சந்தியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
அதேவேளை, இலங்கை சுதந்திர சேவையாளர் லெஸ்லி தேவெந்திரவின் தலைமையில் கண்டி சிங்கள வர்த்தக முன்னணி மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடத்தவுள்ளது. அத்துடன் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 35 சுயாதீன தொழிற்சங்கங்கள் தமது மே தினக் கூட்டத்தை மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் பி.ப. 3.00 மணிக்கு நடத்தவுள்ளதுடன் அதற்கான ஊர்வலம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மதியம் 1.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.