தன்னைக் குறித்து அமைச்சர் அலி சப்ரியால் தெரிவிக்கப்பட்ட நாடாளுமன்றத்துக்குப் பொருத்தமற்ற கருத்துக்கள் குறித்து சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் இன்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் அலி சப்ரி சபையில் மன்னிப்புக் கோரினார்.
நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து சாணக்கியன் எம்.பி. உரையாற்றினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அமைச்சர் மனுஷ நாணயக்கார என்னைப் பார்த்து புலி என்று கூறியிருந்தார். இவ்வாறான அரசியல் எம்மிடத்தில் காணப்படக்கூடாது. நாம் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்.
அமைச்சரவை அமைச்சர்கள் இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களை இந்த உயரிய சபையில் பயன்படுத்துவது வருத்தத்துக்கு உரியதாகும்.
இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற தத்துவங்கள், சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் நான் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை எழுப்ப வேண்டியுள்ளது.
மேலும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நான் இந்த நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பிலேயே பேசுகின்றேன். மட்டக்களப்பு மாவட்டமும் இலங்கையில் ஒரு மாவட்டம் என்று கூறினார்.
அத்துடன், நான் ஒரு பிரிவினைவாதி, மதவாதி என்று என்னைக் குறிப்பிட்டார்.
இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள் நாடாளுமன்றத்துக்குப் பொருத்தமானது இல்லை என்றே நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.
வெளிவிவகார அமைச்சர் என்னை இங்கு தேவையற்ற விதத்தில் விமர்சித்துள்ளார்.
நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவன்.
எனினும், வெளிவிவகார அமைச்சர் தேசியப்பட்டியல் உறுப்பினராவார்.
எனது மக்கள் சார்பாக அவர்களது பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கான கடப்பாடும் பொறுப்பும் எனக்குக் காணப்படுகின்றது.
ஒரு குறிப்பிட்ட நபரைத் திருப்திப்படுத்துவதற்காக அவர் நியமிக்கப்பட்டு இருக்கலாம்.
நான் எனது சார்பாக பொறுப்பான அமைச்சிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் நான் இந்த நாடாளுமன்றத்தில் அந்த விடயங்களைச் சுட்டிக்காட்ட முனைந்தபோது அந்தக் கேள்வியைக் கேட்பதற்கு எனக்கு நேர அனுமதி மறுக்கப்பட்டது.
அன்றைய தினம் அந்த விடயத்துக்கு உரிய அமைச்சரும் இங்கு சமூகமளித்திருக்கவில்லை. எனவே, அதற்காக அவர்கள் பதில் கூறவில்லை.
எனினும், நான் அந்த வினாவை எழுப்பியபோதும் எனக்கான நேரத்தைக் கோரிய போதும் அமைச்சர் மனுஷ நாணயக்கார என்னைப் ‘புலி’ என்றும்’ ‘இனவாதி’ என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சர் மனுஷ நாணயக்காரவே என்னைப் புலி என்றும் இனவாதி என்றும் அழைத்தார்.
மனுஷ நாணயக்கார இவ்வாறு குறிப்பட்டதை நினைத்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். பொறுப்பான அமைச்சர்கள் என்ற விதத்தில் இவ்வாறு நடந்துகொள்வது வேதனைக்குரிய விடயமாகும்.” – என்றார்.