கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் காட்டு யானைகளின் உயிரிழப்புகள் சற்று அதிகரித்துள்ளது என்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வருட ஆரம்பம் முதல் கடந்த 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 144 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
துப்பாக்கிப் பிரயோகம், மின்சாரம் பாய்ச்சுதல், வெடிமருந்து வைத்தல் போன்ற மனித செயற்பாடுகளால் மாத்திரம் 67 யானைகள் உயிரிழந்துள்ளன.
மனித செயற்பாடுகளால் காட்டு யானைகள் உயிரிழக்கும் வீதம் 2022 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 4 வீதத்தால் அதிகரித்துள்ளது என்று வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 4 மாதங்களில் அதிகப்படியாக 34 காட்டு யானைகள் அனுராதபுரம் மாவட்டத்திலேயே உயிரிழந்துள்ளன.
பொலனறுவை மாவட்டத்தில் 29 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் 19 யானைகள் உயிரிழந்துள்ளன.
இதேவேளை, இந்த வருடம் யானை – மனித மோதல் காரணமாக இதுவரையில் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.