முக்கியமான தகவல்களைத் திரிபுபடுத்தி மக்களை அரசு ஏமாற்றி வருவது வருந்தத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த செப்டெம்பரில் அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர்கள் மட்டத்திலான ஒப்பந்தத்தை எட்டியதாகக் கூறப்பட்டதிலிருந்து, அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்க விடயங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு பல சந்தர்ப்பங்களில் அரசிடம் கோரிக்கை விடுத்தோம்.
இது தொடர்பில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாக அமைந்திருந்தது.
அவ்வாறு இருந்தும், அந்தக் கோரிக்கைகள் எதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்பதோடு, இவ்வருடம் மார்ச் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் இறுதி அங்கீகாரம் கிட்டும் வரை நாடாளுமன்றத்துக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எந்த விடயங்களையும் அறிந்துகொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அரசின் இந்த வெளிப்படைத்தன்மையற்ற நடத்தையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். முக்கியமான தகவல்களைத் திரிபுபடுத்தி மக்களை அரசு ஏமாற்றி வருவது வருந்தத்தக்கது.” – என்றார்.