இராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கடும் சண்டை நடந்து வருகின்றது. இந்தநிலையில், அங்கிருந்து வெளியேற முடியாமல் 100 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தமிழர்கள் தவிக்கின்றார்கள். அவர்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
ஆயுத மோதலால் சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இதனால் விமானப் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால் சூடானில் இருந்து வெளிநாட்டினர் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றார்கள்.
தெருக்களில் துப்பாக்கி சண்டை நடப்பதால் வீடுகள் மற்றும் பணியாற்றும் இடங்களில் அவர்கள் முடங்கிக் கிடக்கின்றார்கள்.
சூடானில் 72 மணி நேர சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் சூடானில் 100 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தமிழர்கள் சிக்கியுள்ளனர் என்று தகவல் வெளியாகியிருக்கின்றது.
அங்குள்ள தமிழர்கள், வட்ஸ் அப் குரூப் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அதில் தங்களது விவரங்கள், எந்தப் பகுதியில் இருக்கின்றோம் என்ற தகவல்களைபி பகிர்ந்துள்ளனர்.
இதுவரை 84 தமிழர்கள் வட்ஸ் அப்பில் தகவல்களை அனுப்பியுள்ளனர். மின்சாரம் மற்றும் இணைய தள வசதி முடங்கி உள்ளதால் தகவல் பரிமாற்றத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேலும் சூடானில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றார்கள்.