தமிழர் தாயகத்தில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள முழு முடக்கப் போராட்டத்துக்கு ஆதீனங்களும், இந்து அமைப்புக்களும் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
“தமிழ் தேசிய சக்திகளின் ஒருங்கிணைப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்துக்கு எமது பூரண ஆதரவையும் ஆசியையும் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.
அண்மைக்காலமாக வெவ்வேறு வடிவங்களில் வீரியம் பெற்றுள்ள தமிழின அழிப்புக்களுக்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழினமும் தமது எதிர்ப்பைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும். எமக்கான பயனுறுதி வாய்ந்த தீர்வுகள் கிடைக்கும் வரை ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் சிவில் அமைப்புக்களும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்த தொடர் போராட்டத்தின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்படும் இந்தக் கதவடைப்பை அனைவரும் இணைந்து வலுச்சேர்ப்போம்.
இன்று வலியுறுத்தப்படும் எம் அடிப்படை உரிமைகள் , மரபுரிமை சார்ந்த பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால் அடுத்த கட்டப் போராட்டங்களுக்கு தமிழ்ச் சமூகம் தயாராக உள்ளது என்பதை அரசும் சர்வதேசமும் புரியும் வகையில் எமது கதவடைப்பு ஒருமித்த ரீதியில் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் தழுவியதாக அமைய அனைத்து தரப்பினரையும் வடக்கு – கிழக்கை சார்ந்த சைவ ஆதீனங்களாகிய நாம் கேட்டு நிற்கின்றோம்.
அதே நேரம் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தொடர்ந்து அரசு செவி சாய்க்காத நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் ஏகோபித்த குரலைப் பிரதிபலிக்கும் வகையில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாடாளுமன்றத்தை புறக்கணிக்குமாறும் கேட்டு நிற்கின்றோம்” – என்று திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தின் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் யாழ்ப்பாணம் மெய்கண்டார் ஆதீனத்தின் தவத்திரு உமாபதிசிவம் அடிகளார் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
“அரசின் அநீதியான செயற்பாடுகளை எதிர்த்து சாத்வீக ரீதியில் அரசுக்கும், உலகுக்கும் எமது உணர்வை துல்லியமாக வெளிப்படுத்துவதற்கு கதவடைப்பு மிகப் பெரிய ஆயுதமாகக் காணப்படுகிறது. இதனை பௌத்த வெறிபிடித்த இந்த அரசுக்கு எதிராக ஏந்தும் அரிய சந்தர்பத்தை தமிழ்த் தேசியக் கட்சிகள் நாளை எமக்கு ஏற்படுத்தியுள்ளன. இதனை முறையாகப் பயன்படுத்தி எமது எதிர்ப்பை வெளிக்கொணரவேண்டும். இந்த அரசு கொண்டுவரும் பயங்கரவாதச்சட்டத்தை சிங்கள மக்களை காட்டிலும் தமிழருக்கெதிராகப் பிரயோகிக்கும் சாத்தியக்கூறுகளே அதிகமாகத் தென்படுகிறன. ஆதலால் நாம் எமது எதிர்ப்பை நன்கு வெளிப்படுத்த வேண்டுமென்று அனைவரையும் அன்புரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்” – என்று இந்து சமயப் பேரவையின் தலைவர் ஈசான சிவ சக்திகிரீவன் தெரிவித்துள்ளார்.