வடக்கு, கிழக்கு ஆயர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு!

Share

தமிழ்த் தேசியக் கட்சிகளால் தமிழர் தாயகத்தில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட ஆயர்கள், யாழ்ப்பாணம் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் மற்றும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு என்பன தெரிவித்துள்ளன.

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும், தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புப் போராட்டத்துக்கு யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தமது பூரண ஆதரவை வழங்கும்” – என்று அதன் இயக்குநர் அருட்பணி ச.வி.ப. மங்களராஜா தெரிவித்தார்.

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இலங்கைக்கு மட்டுமல்ல எந்தவொரு நாட்டுக்கும் பொருந்தாது. அதனை முற்றாக எதிர்க்கவேண்டும். நாம் இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்குகின்றோம்” – என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ தெரிவித்தார்.

“மக்களினுடைய சுதந்திரத்துக்கும் உரிமைக்கும் பாதகமான விடயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கப்படவேண்டும். ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவளிக்கின்றேன்” – என்று திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் தெரிவித்தார்.

“அமைதியான சூழல் நிலவுவதற்காக நாங்கள் எப்பொழுதும் போராடிக்கொண்டே இருப்போம். இவ்வாறான சட்டங்கள் உடனடியாக நீக்கப்படவேண்டும். ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றேன்” – என்று மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா தெரிவித்தார்.

“பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் அதேபோல சகோதர மொழி பேசுகின்ற மக்கள் முனைப்போடு இதனை எதிர்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து. இம்முறை அனைத்து கட்சிகளும் ஒரே கண்ணோட்டத்தில் ஒரே தளத்தில் நின்று ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்ததை நான் பாராட்டுகின்றேன். இதில் எந்தவித வேறுபாடுகளுமற்று அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அனைத்து தரப்பினரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” – என்று தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் கலாநிதி வேலுப்பிள்ளை பத்மதயாளன் தெரிவித்தார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு