“முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமுகமான சூழ்நிலையில் இவ்வருட நோன்புப் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். அது அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது உறுதி.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“ரமழான் காலம் மற்றும் நோன்புப் பெருநாள் என்பன மதிப்புமிக்க மத, ஆன்மீக மற்றும் சமூக அமைப்பைக் கொண்டுள்ளன. அந்த விழுமியங்களையும் பாதுகாத்து நேர்மையாக நோன்பு நோற்று முஸ்லிம்கள் தம்மை அர்ப்பணிக்கின்றனர்.
ரமழான் மாதம், நோன்பு நோற்று காலத்தை கழிப்பதாக மட்டுமின்றி, ஏனைய சமூகத்தவர் மீதான கரிசனை மற்றும் தியாகம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் சிறப்புக்களை உலகுக்கு உரைப்பதாகவும் அமைந்துள்ளது.
சமாதானம் மற்றும் சகோதரத்துவம் கொண்ட வளமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னெடுக்கும் பணிகளின்போது, இந்தச் சமூகக் கோட்பாடுகள் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதோடு அவற்றை சமூக நலனுக்காகப் பயன்படுத்த நாம் அனைவரும் உறுதிபூணவேண்டும்.
சாதி, மத பேதமின்றி ஒரே இலங்கை மக்களாக ஒன்றிணைந்து எமது தாய்நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லவும், சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புகள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்பவும் இவ்வருட நோன்புப் பெருநாள் அருட்கொடையாக அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.
இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதர மக்களுக்கு அமைதி, நல்லிணக்கம் நிறைந்த மகிழ்ச்சியான நோன்புப் பெருநாளாக அமையட்டும்..!” – என்றுள்ளது.