“இலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போவது நாமே. இனிமேல் ஒருபோதும் ராஜபக்ச குடும்பத்தால் ஆட்சிக்கு வர முடியாது. அந்தளவுக்கு அவர்களால் நாடு வீழ்ந்துள்ளது” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ராஜபக்ச குடும்பத்தினர் இனி 20 வீதத்துக்கும் குறைவான வாக்கு மட்டத்தில்தான் இருப்பார்கள். அவர்களது அரசியல் ஆதிக்கம் முடிந்துவிட்டது. அவர்களால் அரசியலில் அழுத்தம் மாத்திரம் கொடுக்க முடியும். தலைவர்களாக மாற முடியாது.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை எடுத்துக்கொண்டால் சவாலை ஏற்றுக்கொள்ளும் திறமை அவரிடம் இல்லை.
இவர்களுக்கு வெளியே இருந்து அடுத்த ஆட்சி மலரப் போகின்றது.
நாட்டுப் பற்று தொடர்பில் சரியாகச் சிந்திக்கக்கூடிய எல்லாத் தரப்பினரையும் நான் ஒன்றிணைத்து வைத்துள்ளேன். பெரிய திட்டமே என்னிடம் உள்ளது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாம் அந்தத் திட்டத்துக்குள் நுழைவோம். எந்த அடிப்படையில் என்று எவரும் இப்போது கேட்க வேண்டாம். அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக நாமே இருப்போம்.
குடும்ப அரசியலை அடிப்படையாகக் கொண்ட கட்சியின் பக்கம் நாம் செல்லமாட்டோம். பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு வெளியேதான் எமது அரசியல் இப்போது உள்ளது.
ரணில் எமது பேச்சைக் கேட்பதற்குத் தயார் என்றால் அவருடன் வேலை செய்வதற்கு நாம் தயார்.” – என்றார்.