இலங்கையில் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு – கிழக்கு பெண்கள் கூட்டு என்ற அமைப்பு இன்று மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை வடக்கு, கிழக்கில் நடத்தியது.
அம்பாறை மாவட்டம் மத்திய முகாமில் உள்ள நான்காம் கிராமம் பாமடி என்ற பிரதேசத்திலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது .
இதன்போது அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இந்தக் கூட்டு முன்னணியின் சுமார் 300 பெண்கள் மும்மொழிகளிலுமான சுலோகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இறுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம் என்ற தலைப்பிலான மகஜரை பகிரங்கமாக வாசித்து கோஷம் எழுப்பி போராட்டத்தை அவர்கள் நிறைவு செய்தனர்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம் எனவும், கருத்துச் சுதந்திரம் பறிபோகும் என்றும், இது முற்றுமுழுதாக வேண்டாம் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.