அகிம்சையை போதிக்கும் வழியில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தாய்மார் தேடிக்கொண்டிருக்கிறார்கள் எனத் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.
போராட்ட பந்தலில் இன்று (19) அன்னை பூபதியின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“தியாகத் தாய் அன்னை பூபதி அம்மாவினுடைய 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாள் இன்று. தமிழர்களுக்காக தன்னை தியாகம் செய்ததில் ஒரு தாயாக அன்னை பூபதி அம்மா உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அவரை நாங்கள் வழங்கி கொள்கிறோம்.
இன்று 2250 நாளாக தாய்மாரும் இன்று தங்களுடைய பிள்ளைகளுக்காகவும் தமிழர்களுக்கு ஒரு தீர்விற்காகவும் தொடர்ந்து அதே வழியில் ஜனநாயக வழியில் உலகத்திற்கு அகிம்சையை போதிக்கும் வழியில் இந்த தாய்மாரும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு தங்களுடைய பிள்ளைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
எங்களுடைய பிள்ளைகளைக் கண்டுபிடிப்பதற்கு இலங்கையை ஐசிசிக்கு கொண்டு போவதற்குரிய ஐரோப்பிய அமெரிக்க ஒன்றியத்தின் உதவியுடன் இப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
இலங்கை இன்றைய நிலையில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை சீனாவிற்கு வழங்கி இலங்கையில் ராடர் தளங்களை நிறுவுவது சர்வதேச போர்ச்சூழலை இலங்கைத் தீவில் உருவாக்கி இருக்கின்றது.
இனவாதிகளும் இனப்படுகொலை அரசியல்வாதிகளும் சேர்ந்து சர்வதேச போர்ச்சூழலுக்குள் இலங்கையைக் கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள்.” – என்றார்.