கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டு கப்பலுக்குள் பிரவேசித்து, சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நால்வருக்கும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் காலி பிரதம நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்போது, ஒவ்வொருவரையும் தலா ஐந்து இலட்சம் ரூபாவுக்கு நிகரான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதியளித்த நீதிவான், நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறும் நடவடிக்கைக்கு ஒத்தாசை வழங்கிய நபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் ஜூலை 20ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
வடக்கில் வசிக்கும் நான்கு இளைஞர்களே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டுக்கு சொந்தமான சரக்குக் கப்பலுக்குள் சட்டவிரோதமாக வெளிநாடு செல்லும் நோக்கில் இரகசியமாக நான்கு இளைஞர்களும் பிரவேசித்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த மார்ச் 26 ஆம் திகதியன்று, கப்பல் ஊழியர்கள் அமெரிக்காவிற்குச் சென்று கொண்டிருந்தபோது சுயஸ் கால்வாய் அருகே ஊழியர்கள் அல்லாத குழுவொன்று கப்பலுக்குள் இருப்பதை அடையாளம் கண்டனர்.
கப்பல்களை கையாளும் கெக்க்ஷிப்பிங் நிறுவனத்துக்கு அறிவித்த பின்னர் அவர்கள் இலங்கை செல்லும் மற்றுமொரு கப்பலிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர், கடந்த 10ஆம் திகதி, குடிவரவு அதிகாரிகள் இழுவைப் படகில் குறித்த கப்பலுக்குச் சென்று, குறித்த இளைஞர்களை அழைத்து வந்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.