தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இனவழிப்புக்கு எதிரான அடையாளக் கவனயீர்ப்புப் போராட்டம் நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு கிளிநொச்சி சேவைச்சந்தை வளாகத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க வலியுறுத்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதியைப் பெற்றுக்கொடுத்தல், அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த வலியுறுத்தல், சமகாலத்தில் இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் அதனோடு இணைந்த அரச திணைக்களங்களால், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இன, மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்தல், அட்டைப் பண்ணைகள், இறால் பண்ணைகள் அமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கடல்வள அபகரிப்பைக் கைவிடக் கோரல், சீன நாட்டின் முதலீட்டாளர்களுக்கு கிளிநொச்சியின் காணிகளைத் தாரைவார்ப்பதைத் தடுத்து நிறுத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையால் மேற்கொள்ளப்படும் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.