இலங்கையில் உள்ள குரங்குகளை, சீனாவில் உள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக, அமைச்சரவையால் குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் அந்த அமைச்சு கூறியுள்ளது.
இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில், ஆராய்வதற்காக வனவளத்துறை, நீதி பெருந்தோட்ட மற்றும் விவசாய அமைச்சுக்களைச் சேர்ந்த 4 அதிகாரிகள் கொண்ட குழு அரசால் நியமிக்கப்பட்டிருந்தது.
சீனாவின் அதிகாரிகள் சிலரினால் இலங்கையில் உள்ள குரங்குகளைச் சீனாவில் உள்ள விலங்கியல பூங்காக்களுக்கு வழங்குமாறு விவசாய அமைச்சுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக, இலங்கையில் உள்ள ஒரு லட்சம் குரங்குளைச் சீனாவுக்கு அனுப்பும் எதிர்பார்ப்புடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக விவசாய அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், இந்த விடயம் தொடர்பாக சமூகத்தில் பாரிய கருத்தாடல் ஏற்பட்டுள்ளதுடன், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் முறைமை தொடர்பில், அரசு இதுவரையில் உரியவாறு தெளிவுபடுத்தவில்லை என்று சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இலங்கை குரங்குளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யவதற்கு முன்னர், குரங்குகள் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் சூழலியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.