பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பொலிஸாருக்கு மேலதிகமாக புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
புத்தாண்டு காலத்தில் சந்தைக்குப் போலியான வர்த்தகர்கள் நுழைகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியான பொருட்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன், போலி நாணயத்தாள்களும் புழக்கத்தில் விடப்படுகின்றன. அது குறித்து அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.
அதேநேரம், திட்டமிட்டவாறு திருட்டுச் சம்பவங்களின் ஈடுபடும் குழுவினரின் நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் பெறுமதியான ஆபரணங்களை அணிந்து செல்ல வேண்டாம் என்பதுடன் பணப்பையைக் கவனமாக வைத்திருக்க வேண்டும்.” – என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.