முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் போதகரால் நடத்தப்படும் ‘நொக்ஸ்’ என்ற முன்பள்ளி சட்டவிரோதமாக இயங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்பள்ளியை நடத்துவதற்குரிய அனுமதியை வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் மேற்படி போதகர் பெற்றுக்கொள்ளவில்லை என்று திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மேற்படி முன்பள்ளி சில ஆண்டுகளுக்கு முன்னர் இயங்கியதாகவும் முறையான அனுமதியைப் பெற்று செயற்படுத்துமாறு அதிகாரிகள் பணித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் மாணவர்கள் இன்மையால் சில ஆண்டுகள் இயங்காமல் இருந்த மேற்படி முன்பள்ளி மீண்டும் சில வாரங்களுக்கு முன்னர் இயங்க ஆரம்பித்துள்ளது.
மாணவர்கள் பெரியளவில் முன்பள்ளியில் சேராததையடுத்து பொருள்களை இலவசமாக வழங்கியும், பணம் வழங்கியும் இணைக்க முயல்வதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இது மதமாற்ற முயற்சியாக இருக்கும் என்று அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த முன்பள்ளியின் பின்புலத்தில் வடக்கு மாகாணத்திலுள்ள மாவட்ட செயலர் உடந்தையாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.