சுயாதீன ஊடகவியலாளர் சனத்திடம் இரு மணித்தியாலங்கள் ரி.ஐ.டி. விசாரணை!

Share

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மரணித்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை ஊடகங்களில் வெளியிடுவது அந்த அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப ஊக்குவிக்கும் என்று பொலிஸார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து போராடி மரணித்த மலையகத் தமிழ் மக்களின் பெயர்ப்பட்டியல் அடங்கிய கட்டுரை தொடர்பாக சுயாதீன ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பிய போது பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு இந்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சுயாதீன ஊடகவியலாளர் இராமச்சந்திரன் சனத்தை, நுவரெலியா பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இம்மாதம் 6ஆம் திகதி அழைத்து, இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

மலையகத் தமிழர்களின் தேசியத்தை அங்கீகரித்து அவர்களுக்கு காணி உரிமை வழங்கக் கோரி தலைநகரில் கிதுசர குழுவினர் போராட்டம் நடத்திய தினத்தன்று, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், முன்னாள் நாடாளுமன்ற ஊடகவியலாளர் இராமச்சந்திரன் சனத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணைகளின் போது சித்திரவதைகளைப் பயன்படுத்துவதில் பெயர் பெற்ற முன்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவு என அழைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு ஊடகவியலாளரை வரவழைத்தமை அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என உலகளவில் மனித உரிமை ஆர்வலர்களின் பாதுகாப்புக்காகச் செயற்படும் சர்வதேச அமைப்பு கண்டித்துள்ளது.

“இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் அது தொடர்பான வழிமுறைகள் வரலாற்று ரீதியாக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இராமச்சந்திரன் சனத்தை விசாரணைக்கு அழைத்தமை அவரது பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றது. மனித உரிமைப் பாதுகாவலர்கள், அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. அவர்கள் மனித உரிமைகளை ஊக்குவிக்கவும் ஊழலை வெளிக்கொண்டு வரவும் அவர்கள் முயற்சிப்பதே இதற்கு காரணம் எனத் தோன்றுகின்றது. முயற்சிப்பதால்தான் இது தெரிகின்றது” – என்று டப்ளினை தளமாகக் கொண்ட Frontline Defenders அமைப்பு கூறியுள்ளது.

இராமச்சந்திரன் சனத்தை அழைப்பதற்கு வழிவகுத்த ஊடக செய்தி குறித்து கேள்வி எழுப்பிய விசாரணை அதிகாரிகள், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது, அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் போராடுவதற்கும் தனிநபர்களிடையே சிந்தனையை உருவாக்கும் என்று கூறியுள்ளனர்.

தாம் தெரிவித்த தகவல்கள் வேறொரு இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை எனப் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளிடம் தெரிவித்த ஊடகவியலாளர் சனத், ஏனைய ஊடகங்கள் இன்னமும் முன்னாள் புலி உறுப்பினர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வருகின்றன என்று சுட்டிக்காட்யுள்ளார்.

மலையகத் தமிழ் மக்களின் காணி உரிமை மற்றும் சம்பளப் போராட்டத்துக்காகக் குரல் கொடுத்து வரும் ஊடகவியலாளர் இராமச்சந்திரன் சனத்திடம், ‘பச்சை தங்கம்’ வலைத்தளத்தை நடத்துவதற்கு வெளிநபர்களிடம் இருந்து நிதி உதவி கிடைக்கின்றதா என பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஊடகத்துறையின் பணியால் ஊடகவியலாளர் துன்புறுத்தப்படுவது இது முதன் முறையல்ல.

இலங்கையில் வாழும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் மற்றும் காணி உரிமைக்கான கோரிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டமைக்காக இராமச்சந்திரன் சனத் குறிவைக்கப்பட்டு அவதானிக்கப்பட்டார்.

2021 பெப்ரவரியில் ஒரு ஊதிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற பின்னர், அவர் துன்புறுத்தல் மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டார்.

புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் அடையாளம் தெரியாத நபர்கள் 2021 மார்ச் மற்றும் மே மாதங்களில் அவரது வீட்டுக்குச் சென்று அவரது இருப்பிடம் மற்றும் செயற்பாடுகள் குறித்து விசாரித்தனர்.

மனித உரிமை ஆர்வலரான சனத் இந்தத் துன்புறுத்தலுக்குப் பதிலளிக்கும் வகையில் 2021 மே 25 ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்குக் கடிதம் எழுதினார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” – என்று Frontline Defenders கூறியுள்ளது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மலையகத் தமிழர்கள் குறித்து செய்தி வெளியிட்டதற்காகத் தன்னைக் கைது செய்ய நேரிடும் என்று பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் எச்சரித்ததாகக் கூறும் ஊடகவியலாளர் இராமச்சந்திரன் சனத், பொலிஸாரின் அச்சுறுத்தல் பேச்சு சுதந்திரத்துக்குத் தடையாக அமைந்தது என்று குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு