தமிழ் – சிங்கள மீனவர்கள் மோதல்: விரிவான விசாரணை நடத்தப்படும்! – பொலிஸ் தெரிவிப்பு

Share

திருகோணமலையில் தமிழ் – சிங்கள மீனவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கடலூர் மற்றும் அதனை அண்டிய விஜிதபுர ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த தமிழ், சிங்கள மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 6 மீனவர்களும் திருகோணமலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குவலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். அயல் கிராமத்தைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுருக்கு வலையைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் இரு தரப்புக்கிடையிலும் வாய்த்தர்க்கம் முற்றி, கரையோரத்தில் மோதலாக மாறியது.

இரண்டு தரப்பினரும் கற்கள், கொட்டான்களால் தாக்கிக் கொண்டனர். இரண்டு தரப்பிலும் தலா 3 பேர் வீதம் 6 பேர் காயமடைந்தனர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 6 பேரும், விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 3 பேரும் என 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எஸ்.ஷாஹிர் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு