“ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து 50 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைய எந்நேரமும் தயாராகவுள்ளனர். அமைச்சுப் பதவி பெறுவது அவர்களின் நோக்கம் அல்ல. ரணிலின் சிறந்த ஆட்சியாலும் நாட்டு மக்கள் மீதான அக்கறையாலுமே அவர்கள் அரசுடன் இணையத் தயாராகியுள்ளனர்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அரசுடன் இணையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எம்முடன் பேச்சு நடத்தியுள்ளனர். அவர்கள் எப்போது அரசுடன் இணைவார்கள் என்று தெரியாது.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களாவர். எனவே, தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் குறித்த உறுப்பினர்களை வலைவீசி எடுக்கும் தேவை ரணிலுக்குக் கிடையாது. அவர்கள் தாமாகவே ரணிலுடன் இணைவார்கள்.
எனினும், தற்போதைய நிலைமையில் கட்சி அரசியலை நான் பேச விரும்பவில்லை. அதற்கான நேரம் இதுவல்ல. மக்கள் நலன் என்ற ரீதியில் – அரசு என்ற ரீதியில் நாம் அனைவரும் ஓரணியில் செயற்பட வேண்டும். அப்போதுதான் நாடு மீளெழுச்சி பெறும்.” – என்றார்.