நமுனுகுலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிபிலேகம கடுவலவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாள் மற்றும் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பதாகப் பதுளை பிராந்திய குற்றத் தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து சந்தேகத்துக்குரிய வீட்டைச் சோதனைக்குட்படுத்திய போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 வாள்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருள் ஆகியன பதுளை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் திருமணமான நபர் ஒருவரின் நண்பர்களான கலங்கம தலவத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 3 நபர்களிடம் இருந்து 2,150 மி.கி , 2000. மி.கி, 2,900 மி.கி கஞ்சா போதைப்பொருள் தனித்தனியே மீட்கப்பட்டுள்ளதோடு செல்லக்கதிர்காமத்தைச் சேர்ந்த நபரிடம் இருந்து 3 தடைசெய்யப்பட்ட வாள்களும் கைப்பற்றப்ப்பட்டுள்ளன.
குறித்த 46, 38 ,35 மற்றும் 28 வயதுடைய 4 சந்தேக நபர்களையும் கைது செய்து நமுனுகலை பொலிஸ் நிலையத்தில் பதுளை குற்றத் தடுப்புப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.
பதுளை பிராந்திய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி சுஜித் வெதமுல்லவின் ஆலோசனையின் பேரில் நமுனுகுலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் இன்று பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நமுனுகுலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.