நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது, பணத்தை இழக்கும் அல்லது இலக்குகளை எட்டாத நிறுவனங்களை இனி திறைசேரியால் பாதுகாக்க முடியாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
திறைசேரியில் இருந்து பணம் ஒதுக்குவது என்பது இந்த நாட்டில் உள்ள பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பணத்தை அந்த நிறுவனங்களின் பராமரிப்புக்காக ஒதுக்குவது என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக அரசு மக்களுக்கு சுமைகளைச் சுமத்தி நிறுவனங்களைத் தொடர்ந்தும் நடத்தாது ஒழுங்குபடுத்தும் அதிகார சபையாகச் செயற்படும் என்றும் நிதி அமைச்சில் நடைபெற்ற பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 52 பொது நிறுவனங்களில் 39 இலாபகரமானவை. ஏனைய13 அரசு நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கி வருகின்றன. இவ்வாறு நட்டத்தைச் செலுத்தும் 13 அரச நிறுவனங்களின் இழப்பு 1,029 பில்லியன் ரூபாவாகும்.
ஆனால், இலாபம் ஈட்டும் 39 நிறுவனங்களின் இலாபம் 218 பில்லியன் ரூபாவாகும்.
மொத்தத்தில் அரச நிறுவனங்களின் வருடாந்த இழப்பு 811 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.
இலாபம் ஈட்டும் நிறுவனங்களால் திறைசேரிக்கு 28 மில்லியன் ரூபா மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியின் விளைவாக, உலகம் ஏற்றுக்கொண்ட பொருளாதார முறைகளை இலங்கை பின்பற்ற வேண்டியுள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு அந்த நாடு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இனங்காண்பது தனியே மேற்கொள்ளப்பட வேண்டும்.” – என்றார்.