இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜே.ஸ்ரீரங்காவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பான பிரேரணையை நிறைவேற்ற இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் தயாராகி வருகின்றது என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களின் பங்குபற்றுதலுடன் கூட்டப்படவுள்ள உதைபந்தாட்ட சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த ஜனவரி 21ஆம் திகதி முதல் இலங்கைக்கு சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையில் உதைபந்தாட்ட நிர்வாகம் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன், அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கால்பந்து நிறுவனத்தின் தலைவராக உள்ள ஜே.ஸ்ரீரங்கா, வவுனியா மேல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.