நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்குச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடவுள்ளது.
தெற்கு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் கட்சி தாவல் ஏப்ரல் 4 ஆம் திகதி அரங்கேறவுள்ளது எனக் கடந்த வாரம் முழுவதும் தகவல்கள் பரவி வந்த பரபரப்பான சூழ்நிலையிலேயே இன்று சபை கூடுகின்றது.
இதன்போது கொழும்பு, களுத்துறை, பதுளை உட்பட மேலும் சில மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிரணி எம்.பிக்கள் அறுவர் அரசுடன் இணைவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இது குறித்து அதிகாரபூர்வமாக எவ்வித தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
இன்று மு.ப. 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை 1979 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2306/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை மற்றும், 1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2320/46 மற்றும் 2320/47 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு ஒழுங்கு விதிகள் என்பன விவாதிக்கப்படவுள்ளன.
பின்னர் பி.ப. 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாரத்தில் இன்று மாத்திரமே சபை கூடும்.
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு ஏப்ரல் 25 செவ்வாய்க்கிழமை முதல் ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை வரை நாடாளுமன்ற அமர்வு நடைபெறும்.