வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 7 பேர் சாவடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பில் ஹயஸ் வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் காரின் சாரதியான 49 வயதுடைய குடும்பஸ்தரும், காரின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த 28 வயதுடைய இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஹயஸ் வாகனத்தின் சாரதி நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கடுகன்னாவ – ஹெனாவல பகுதியில் மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 44 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான குடும்பஸ்தர் ஹெனாவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தெனியாய பிரதேசத்தில் குறுக்கு வீதியொன்றில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
55 வயதுடைய குடும்பப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவையில் தனியார் பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நண்பர்களான 24, 26 வயதுடைய இளைஞர்களே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளத்தில் இருந்து சீதுவ நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஓட்டோ ஒன்று மாரவில பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஓட்டோ சாரதியான 34 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். அத்துடன் ஓட்டோவில் பயணித்த சாரதியின் மனைவி மற்றும் 4, 7 வயதுடைய இரு பிள்ளைகளும் படுகாயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.