“இலங்கையில் இன, மத ரீதியில் எழுந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியும். தீர்வு இல்லையேல் நாட்டுக்கு முன்னேற்றம் கிடையாது.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இலங்கையில் அமைந்துள்ள ஸ்பெயின் தூதரகத்தின் அரசியல் விவகாரப் பிரிவின் தலைவர் அல்போன்சோ ஹெரெரோ கோரலுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (31) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இரு தரப்பு ரீதியிலான முக்கிய விவகாரங்கள் குறித்து இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்படி விடயத்தைத் தெரிவித்தார்.
சஜித்தின் கருத்தை வரவேற்ற ஸ்பெயின் தூதரகத்தின் அரசியல் விவகாரப் பிரிவின் தலைவர், பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.