தமிழினத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடிய தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ். துரையப்பா விளையாட்டு அரங்குக்கு அருகாமையிலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் காலை 9.30 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் ஆயர் ஜெபநேசன், யாழ். மாநகர முன்னாள் மேயர் இ.ஆனோல்ட், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தந்தை செல்வாவின் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல மலையகத் தமிழர்களுக்காகவும் ஒட்டுமொத்தமாக தமிழ்பேசும் மக்களுக்காகவும் இறுதி மூச்சு இருக்கும் வரை குரல் கொடுத்த தந்தை செல்வா அக்காலகட்டத்தில் மீட்பராகவே பார்க்கப்பட்டார்.