“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமக்கு அமைச்சுப் பதவி தரவில்லையென்றால் நாம் நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படுவோம் அல்லது எதிர்க்கட்சியில் அமர்வோம்.”
– இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகள் என்பது தொடர்ந்தும் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. இதோ தருகின்றேன், அதோ தருகின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இழுத்தடித்துக்கொண்டே இருக்கின்றார். இதனால் அவர்கள் ஜனாதிபதி மீது கடும் கடுப்பில் உள்ளார்கள்.
வரவு – செலவுத் திட்டத்தின் பின் அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை. இப்போது சர்வதேச நாணய நிதியின் நிதி கிடைப்பதற்கான அதன் அனுமதி கிடைத்த பின் அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி தருவார் என்று மொட்டுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்பார்த்தார்கள். அதுவும் நடக்காது போலவே தெரிகின்றது. இதனால் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர்.
ஓரிரு நாட்களுக்கு முன் மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அந்தச் சந்திப்பில் இந்த விடயம் பேசப்பட்டது.
“ஜனாதிபதி அமைச்சுப் பதவி தரவில்லையென்றால் நாம் நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் இல்லாவிட்டால் எதிர்க்கட்சியில் அமர வேண்டும்” – என்று அவர்கள் பஸிலிடம் கூறினர்.
“ஓரிரு நாட்கள் பொறுத்திருந்து பாப்போம். இல்லாவிட்டால் இதையே செய்வோம்” என்று பஸிலிடம் அவர்கள் தெரிவித்தனர்.
அதிலும் ஜோன்சன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தனவுக்கு அமைச்சுப் பதவி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் பஸிலிடம் அவர்கள் வலியுறுத்தினர்.