வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும், ஆலயத்தை மீள அமைத்துக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.
ஆலய இடித்தழிப்புத் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று மதியம் அவசர கடிதம் ஒன்று மாவை.சேனாதிராஜாவால் அனுப்பிவைக்கப்பட்டது. அதில், ஆலயம் இடித்தழிக்கப்பட்டமை இந்து மக்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்றும், ஆலயத்தை அதே இடத்தில் மீள அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாவை.சேனாதிராஜாவின் கடிதத்தையடுத்து நேற்றிரவு அவரைத் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு பேசியுள்ளார் ஜனாதிபதி.
“அமைச்சரவைக் கூட்டம் இப்போதுதான் முடிந்தது. நீங்கள் (மாவை) அனுப்பிய அவசரக் கடிதத்தைப் பார்த்தேன். ஆலயம் இடித்தழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணையை முன்னெடுக்கப் பணித்துள்ளேன். அதனை மீள அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் பணிப்புரை விடுக்கவுள்ளேன்” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது மாவை.சேனாதிராஜாவிடம் கூறியுள்ளார்.