ஆற்றுக்கருகில் வியாபாரத்துக்காக கீரை பறித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் முதலையின் பிடியில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அம்பாறை – காரைதீவு பிரதான வீதியில் மாவடிப்பள்ளி பாலத்துக்கருகில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (22) கீரை பறித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஆற்றுக்குள் இருந்த முதலை ஒன்று இவரை இழுத்துச் சென்றது.
பிரதேச மக்களின் முயற்சியின் பின்னர் இவரது சடலம் மீட்கப்பட்டது.
இதன் பின்னர் இவரது சடலம் பிரேத பரிசோதனைக்கான சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் இன்று (23) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்மாந்துறை, கோரக்கோயில் வீதியைச் சேர்ந்த 62 வயதான இராசப்பு செளந்தராஜன் எனும் குடும்பஸ்தரே இதன்போது சாவடைந்துள்ளார்.