“அடுத்த தேர்தலில் உண்மையான ஆட்சி மாற்றம் நடைபெறும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நாம் இன்று ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கின்றோம். அவர் தலைமையில் புதிய ஆட்சி மலரும் என நாம் எதிர்பார்க்கின்றோம். எது எப்படி இருந்தாலும், அடுத்த தேர்தலுக்குப் பிறகு உருவாகும் எந்தவொரு அரசிலும் நாம் பலமான பங்காளியாக இருப்போம்.”
– இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட செயற்குழுக் கூட்டம் கொழும்பு தெற்கு பணிமனையில் நடைபெற்றது. கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பால சுரேஷ் குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் கே. டி. குருசாமி, தேசிய அமைப்பாளர் பிரகாஷ் கணேசன், பிரசார செயலாளர் பரணிதரன் முருகேசு, நிர்வாகச் செயலாளர் பிரியாணி குணரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாவட்டம் தழுவிய வட்டார செயலாளர்களுக்கு நியமனங்களை வழங்கி உரையாற்றிய கட்சித் தலைவர் மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது:-
“நமக்கு இந்நாட்டில் ஜனாதிபதி ஆக முடியாது. பிரதமர் ஆக முடியாது. சட்டத்தில் தடை இல்லை. ஆனால், நடைமுறையில் அந்த உரிமை எமக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அரசுகளில் பலமான பங்காளியாக இருக்கும் உரிமையை நாம் பயன்படுத்துவோம். அதன் மூலமே நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுக்கு நாம் பணியாற்ற முடியும்.
இதுவே ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு. எமது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு. நாம் இடம்பெறும் எமது அரசு எதுவென நாம் உரிய வேளையில் தீர்மானிப்போம்.
இன்றைய அரசில் இணைந்து உடனடியாகப் பதவிப் பிரமாணங்களைச் செய்து பதவி ஏற்க எமக்கு முடியும். அதற்கான திறந்த அழைப்பு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து, எமக்கு எப்போதும் இருக்கின்றது. ஜனாதிபதி ரணிலை அணுக எனக்கு தரகர் தேவையில்லை. ஒரு தொலைபேசி அழைப்பு போதும். ஆனால், இன்று அரசில் நுழைந்து அமைச்சராக ஊர்வலம் வருவதில் எமக்கு நாட்டம் இல்லை. அதற்கான காரணங்கள் இன்று இல்லை. மக்களுக்குப் பணி செய்யும் சாத்தியங்கள் இந்த அரசில் இன்று இல்லை.
கடந்த 2015 – 2019 நல்லாட்சி அரசில் நாம் பலத்த சவால்களுக்கு மத்தியில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தோம். அதற்கு முன் 40 ஆண்டுகளில் மலையகத்தில் நடைபெறாத அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தோம். சொந்தக் காணி, தனி வீட்டுத் திட்டத்தை அமைச்சரவை அங்கீகார சட்ட வலுவுடன் ஆரம்பித்து வைத்தோம். மலையகத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வந்து அவர் வாயில் இருந்து மேலும் 10 ஆயிரம் வீடுகளுக்கான உறுதிமொழியைப் பெற்றோம். அன்று நாம் ஆரம்பித்த திட்டங்களை, இன்று அங்கே முன்னெடுத்தாலே போதும். புதிதாக வேறு ஒன்றும் செய்யத் தேவையில்லை.
கொழும்பில் 2010 – 2015 ஆண்டுகால ராஜபக்ச ஆட்சியின் போது, கொழும்பு மாநகரில் பின்தங்கிய குடிசை வாழ் தமிழ் பேசும் மக்களை இராணுவத்தைக் கொண்டு, அப்புறப்படுத்தி தூர இடங்களில் கொண்டு சென்று குடியேற்ற, அன்றைய அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டதையும், அவற்றை எதிர்த்து களத்தில் நின்று நாம் போராடியதையும் நீங்கள் மறக்க மாட்டீர்கள்.
2015 – 2019 நல்லாட்சி அரசில், வட கொழும்பில் நமது அரசு, 13 ஆயிரத்து 150 தொடர்மாடி மனைகளைக் கட்டியது. இன்று வடகொழும்பில் பின்தங்கிய குடிசைக் குடியிருப்புகள் இல்லை. பின்தங்கிய குடிசை வாழ் மக்களை நாம் தொடர்மாடி மனைகளில் குடியமர்த்தினோம். ஒருவரையும் கொழும்புக்கு வெளியே அப்புறப்படுத்தக் கூடாது என்பதே என் ஒரே நிபந்தனையாக இருந்தது. அன்றைய துறைசார் அமைச்சர் நண்பர் சம்பிக்க ரணவக்க மிக நியாயமாக நடந்துகொண்டார். தொடர்மாடி மனைகளில் குடியேற்றப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையோர் தமிழ், முஸ்லிம் மக்களாவர்.
அதையடுத்து கொழும்பில் வாடகை வீடுகளில் வசிக்கும் நமது மக்களுக்கு சொந்தமாக வீடு கட்டித்தரும் திட்டம் இருந்தது. ஆனால், இனவாதிகளால் எமது அரசு வீழ்த்தப்பட்டது. அந்தத் திட்டம் என்னிடம் இருக்கின்றது. மீண்டும் நாம் வருவோம். அதை நான் முன்னின்று நிறைவேற்றுவேன். அதுவரை ஓயமாட்டேன்.
எமது கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி. எமது கூட்டணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி. இரண்டுக்கும் என்னை தலைவராகத் தேர்வு செய்துள்ளீர்கள். இங்கே வேறு எதுவும் எமது கட்சி இல்லை. இங்கே வேறு எவரும் எமது தலைவர் இல்லை. ஆகவே, எமது கட்சியையும், கூட்டணியையும் நாம் வளர்ப்போம். எமது கட்டமைப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் கட்டி அமைப்போம்.” – என்றார்.