யாழ்., வடமராட்சி கிழக்கு – குடத்தனையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் தந்தை பலியாகியுள்ளதுடன் மகள் படுகாயமடைந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியைச் சேர்ந்த சின்னையா கணேசசிங்கம் (வயது 44) என்பரே உயிரிழந்துள்ளார். அவருடைய 21 வயது மகள் படுகாயமடைந்துள்ளார்.
அம்பன் பகுதியில் மணல் ஏற்றிக்கொண்டு பருத்தித்துறை நோக்கி வந்த லொறியும், பருத்தித்துறையில் இருந்து மருதங்கேணி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அவருடன் பயணித்த அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பருத்தித்துறைப் பொலிஸார், மண் ஏற்றி வந்த லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.