சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட நிபந்தனைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த வேண்டும் எனவும், தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் மக்கள் விரோத அரசு கூறும் செய்தி பாரதூரமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அண்மைக்காலமாக போராட்டங்கள் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட கண்ணீர்பபுகையின் தரம் மற்றும் அவற்றின் உள்ளார்ந்த தன்மை குறித்து உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் வலியுறுத்தினார்.
நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய சபை அமர்வில் எழுப்பிய கேள்விகள் வருமாறு:-
“நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் காரணமாகக் கொண்டு பின்வரும் விடயங்களைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளாகக் கருதி அரசிடம் இருந்து குறிப்பிட்ட பதில்களையும், விளக்கங்களையும் எதிர்பார்க்கின்றேன்.
01.சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு கையொப்பமிட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாது?
02. குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம், மறுசீரமைப்புக்கு ஆளாகும் அரச நிறுவனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் யாது?
03. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய நிபந்தனைகள் என்ன? அந்த ஒப்பந்தத்தை இந்த வாரம் இந்தச் சபைக்குச் சமர்ப்பிக்க முடியுமா?
04. மக்கள் ஆணை இன்மையால் தேர்தலை ஒத்திவைக்கும் அரசு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய தரப்புகளுடன் மேற்கொள்ளும் உடன்படிக்கைகள் மற்றும் தீர்மானங்களுக்கு மக்களின் ஆணையைப் பெறுவது எவ்வாறு?
05. சரியான நேரத்தில் தேர்தலை நடத்தாத ஒரு நாட்டை ஜனநாயக நாடு என எங்கனம் அழைக்க முடியும்?
06. இந்த ஆண்டு தேர்தல் எதனையும் நடத்த அரசு திட்டமிடவில்லையா?
07. அவ்வாறு இல்லாவிட்டால், இரண்டாவது தடவடையாகவும் திகதி குறிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை நிதி அமைச்சு தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்காமைக்கான காரணங்கள் யாது?
08. அரச அச்சகரால் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேர்தல் ஆணைக்குழுவால் கோரப்பட்ட தொகை எவ்வளவு?
09. அவ்வாறு கோரப்பட்ட தொகையில் எவ்வளவு தொகை இப்போது வழங்கப்பட்டுள்ளது? இன்னும் எவ்வளவு தொகை அரச அச்சகத்துக்குக் கொடுக்க வேண்டும்? அந்தத் தொகையை எப்போது மட்டில் கொடுக்க முடியுமாக இருக்கும்?
10. புதிய வருமான வரிச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் அரசுக்குக் கிடைத்துள்ள வருவாய் எவ்வளவு?
11. கடந்த காலத்தில் தொழில் வல்லுநர்களால் புதிய வருமான வரிச் சட்டத்தில் என்ன திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன? அந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு அரசு சம்மதிக்கின்றதா?
12. புதிய வருமான வரிச் சட்டத்தில் அரசு திருத்தம் செய்வதை எதிர்பார்ப்பதாக இருந்தால், அது எந்த முறையில் மேற்கொள்ளப்படும் என்பதை விளக்குமா?
13. அண்மையில் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்துக்குள் பொலிஸார் நுழைந்து, மாணவர்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சரால் கோரப்பட்ட அறிக்கை மற்றும் அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் யாது?
14. கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய இராணுவத் தளபதி அல்லது பொலிஸ்மா அதிபருக்குத் தெரியாத படைகள் பயன்படுத்தும் சீருடைக்கு இணையான சீருடை அணிந்த தடி ஏந்தி இருந்தவர்கள் யார்?
15. குறித்த அறியப்படாத குழுவுக்குக் கட்டளை பிறப்பித்தது யார்? இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் யாது?
16. கடந்த காலங்களில் போராட்டங்களைக் கலைக்க அரசு பயன்படுத்திய கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் பலர் உயிரிழந்தனர். இரசாயன விஷக் கலவையா இதற்குக் காரணம்? அல்லது காலாவதியான கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தியமையா இதற்குக் காரணம்?
17. 2022 மே 9 ஆம் திகதி அன்று அலரி மாளிகை அருகில், 2022 ஜூலை 13 ஆம் திகதி அன்று பிரதமர் அலுவலகம் அருகில், 2023 பெப்ரவரி 26 ஆம் திகதி அன்று லிப்டன் சுற்றுவட்டத்துக்கு அருகில் மற்றும் 2023 மார்ச் 07 ஆம் திகதிஅன்று கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களைக் கலைக்கப் பயன்படுத்தப்பட்ட CS Shells மற்றும் CS Grenade கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் உற்பத்தி திகதிகள் மற்றும் காலாவதி திகதிகள் யாது?
18. குறித்த போராட்டங்களில் பயன்படுத்தப்பட்ட CS Shells மற்றும் CS Grenade கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் தரத்தை உறுதி செய்ய முறையான ஆய்வகப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதா? குறித்த பரிசோதனை அறிக்கையை இந்தச் சபையில் சமர்ப்பிக்க முடியுமா? அவ்வாறு சமர்ப்பிக்க முடியாது என்றால் ஏன் முடியாது?
19. மேலும் 15,000 CS Shells மற்றும் CS Grenade கண்ணீர்ப்புகைக் குண்டுகளைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதா? இதற்காக மதிப்பிடப்பட்ட தொகை எவ்வளவு?”
– மேற்படி கேள்விகளை எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர்.