“உள்ளூராட்சி சபைகளின் அதிகார காலம் நிறைவுக்கு வந்துள்ளது. தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும். இல்லையேல் தேர்தலை வலியுறுத்தும் மக்களின் மாபெரும் போராட்டம் நாட்டின் நாலாதிசையெங்கும் வெடிக்கும்.”
– இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க.
ஹோமாகம பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டு மக்களின் முழுமையான ஆதரவு ‘திசைகாட்டி’ சின்னத்துக்குக் கிடைத்துள்ளது.
ஆளும் தரப்பினருக்கு அரசின் பலம் காணப்பட்டாலும் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் பலமே போதுமானது.
இந்த மக்கள் பலத்துக்கு – மக்கள் சக்திக்கு அஞ்சியே உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசு பின்னடிக்கின்றது.
தேர்தலை அரசு தொடர்ந்தும் ஒத்திவைக்க முடியாது. 340 உள்ளூராட்சி சபைகளின் அதிகார காலம் நிறைவுக்கு வந்துள்ளது. எனவே, தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும். இல்லையேல் தேர்தலை வலியுறுத்தும் மக்களின் மாபெரும் போராட்டம் நாட்டின் நாலாதிசையெங்கும் வெடிக்கும். இதை அரசாலும் அதன் படைகளாலும் தடுக்க முடியாது” – என்றார்.