சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்களும், அவர்களுக்கு உதவியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறார்கள், 5 பெண்கள், 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்த ஒருவர் உட்பட 17 பேர் நேற்றிரவு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கொக்குவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்திலுள்ள வீடு ஒன்றை நேற்றிரவு 7 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலாக பொலிஸ் குழுவினர் சுற்றிவளைத்தனர்.
இதன்போது சட்டவிரோத ஆள்கடத்தல் மாபியாவைச் சேர்ந்த ஒருவர், முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 16 பேரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம் ஆஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து அவர்களை அழைத்து வந்து மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கு கடந்த ஒரு மாதகாலமாக தங்கவைத்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது
கைது செய்யப்பட்ட 17 பேரிடமும் மேலதிக விசாரணைகளைக் கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.